தம்

கல்லூரி நாட்களில் அந்த பருவத்திற்கே உரிய குறும்புகளும் ராவடிகளும் மனதில் எங்கேயோ பதிந்தே இருக்கும். 2ஆம் தேதி Benson & Hedges / More கழுதை தேய்ந்து வில்ஸ் பில்டர், கோல்ட் ப்ளேக், கத்தரி, கணேஷ் பீடி அளவு மாதக்கடைசி கட்டெறுப்பான கதை மாதாமாதம் நடக்கும் ஒரு சடங்கு. அது தவிர மாதக்கடைசியில் பாக்கெட் சாராயம் அடிக்கக்கூட வக்கில்லாமல் வயிற்றில் ஈரத்துணி கட்டி பிலிங்காய் லுக்கு விடும் நண்பர்களின் முகங்களை மறக்கத்தான் முடியுமா. அந்த சமயங்களில் வரும் எரிச்சல்கள், போலிச் சண்டைகள், ஜல்ஜாப்புகள் எல்லாம் இரவு உணவருந்திய பிறகு, நடிகைகளுக்கு மார்க் போடும்போதே மறந்துவிடும். பின் விடுதி மேசைதான் மோளம்... கானாவில் இருந்து காட்டுக்கத்தல்வரை எல்லாமே சங்கீதம்தான். யாரோவினுடைய அக்காளும் அம்மாளும் இரக்கமின்றி வாய் வதைக்கப்படுவர். அடுத்தநாள் காலை சித்தி விநாயகர் கோவிலுக்கு போகும் திட்டத்துடன் 20 பேரும் ஒரே அறையில் தண்ணீரை கண்டிராத போர்வைகளைப் போர்த்தி தூங்கிவிடுவதும் வாடிக்கை!