திறந்திடு சிசேம்!

சுமார் நான்கைந்தாண்டுகளுக்கு முன் திறவூற்று / பரி மென்பொருள் (Open source / free software) குறிந்த கீழ்கண்ட கட்டுரையை எழுதி மாலன் அவர்களின் திசைகள் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே அவருடைய மின்னிதழிலும் வெளியிட்டு சிறப்பித்தார். இதை மறுவாசிப்பு செய்தபோது பெரும்பான்னையான விடயங்கள் இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறே அமைந்திருப்பதாகப்பட்டது. எனது சேமிப்பிற்காகவும் உங்கள் நுகர்விற்காகவும் இக்கட்டுரையை வலையேற்றுகிறேன்.

*************************************************************************

03MAY04

திறந்திடு சீசேம் - திறவூற்று / பரி மென்பொருள் பற்றி எளிய அறிமுகம்
-------------------------------------------------------------------------------------
. : டைனோ : .

நாம் நிதமும் உபயோகிக்கும் கணினியில் ஒரு எழுத்தை தட்டச்சு செய்வதற்கும் திரையில் தெரிவதற்கும் இடைப்பட்ட ஒரு நுண் நொடியில் பல ஆயிரக்கணக்கான கட்டளைகள் இயக்கப்படுகின்றன. பல கணினிகள் கூட்டாய் இணைந்து செயல்படும் ஒரு வலைப்பின்னல் (network) தளத்தில் இந்த வேகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மென்பொருளின் வெற்றியை இந்த வேகமும், தொடர்ந்து குறையின்றி செயல்படும் தரக்கட்டுப்பாடுமே நிர்ணயம் செய்கிறது. இந்த வேகத்தை கூட்டவே இன்று பலநூறு கோடி டாலர்களை நிறுவனங்கள் வாரி இரைக்கிறார்கள். அதை திரும்பப்பெற வாடிக்கையாளரிடம், பல்லாயிரம் டாலர்களை வசூலித்தும் விடுகிறார்கள். ஆனாலும் பல நிறுவனங்களின் விற்பனையில் அவர்கள் சோதனைக்கும் தயாரிப்பிற்கும் செலவிடுவதைவிட பல்மடங்கு திரும்பப் பெற்றுவிடுகிறார்கள். மேலும் அந்த மென்பொருட்களுடன் அதற்கான சேவை ஒப்பந்தங்களையும் விற்றுவிடுகிறார்கள். ஐபிஎம், சன், மைக்ரோ ஸாப்ட் போன்ற நிறுவனங்களின் இந்த சேவை ஒப்பந்தங்களின் விலை மென்பொருளின் விலையைக்காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடுகிறது. இந்த சேவை ஒப்பந்தங்களே இன்று இந்த நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டித்தருகின்றன.

இன்று ஒரு கணினியை நாம் வாங்கினால், அதில் பாதிக்கு மேற்பட்ட பணம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுகவேண்டியுள்ளது. 15 - 20 ஆண்டுகளுக்கு முன் கணினி மென்பொருட்களை சன், ஆப்பிள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களே தயாரிக்கமுடியும் என்ற நிலை இருந்தது. அப்படியே சிறிய நிறுவனங்கள் தயாரித்தாலும் அவர்களால் சந்தைப்படுத்தி விற்பனை செய்யவும் விளம்பரம் செய்யவும் போதிய பலமின்றி மடிந்தனர். அதையும் மீறி ஒருவாறாக வெற்றிபெற்ற சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்கி அவர்களின் வெற்றிகண்ட தொழில்நுட்பத்தை தங்கள் தயாரிப்பில் கூச்சமின்றி உபயோகிக்து வந்தனர். அதனால் ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு இந்த பெரிய சுறாக்களின் வாயில் அகப்பட்டு, வாடிக்கையாளர்களை சேர்ந்தடையாமல் அந்நிறுவனங்களின் தயவை எதிர்நோக்கும் நிலை வந்தது.

குவா... குவா... க்குனூ - Birth of GNU
------------------------------------------------

1980களின் கணினியின்பாலும், மென்பொருள் தயாரிப்பின்பாலும் கணினி ஆர்வலர்கள் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாகவும் கணினியின் செயல்பாடுகளைக் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களாய் இருந்தனர். தங்களை கொந்தர்கள் (Hackers) என்று விளித்துக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தனர். (Hacker - One who programs enthusiastically even obsessively or who enjoys programming rather than just theorizing about programming). தங்களின் ஓய்வு நேரத்தில் கணினி குறித்த அறிவை பெருக்கிக்கொள்ள தாமே மென்பொருள் எழுதத்துவங்கினார்கள். தங்கள் நிறுவனம் உபயோகித்து ஒதுக்கிவைத்த கணினிகளில் தன் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத்துவங்கினர். அவர்களின் இந்த ஆர்வமே, 20 வருடங்களில் பில் கேட்ஸ் (Bill Gates), ஸ்காட் மெக்நீலி (Scott McNealy), ஸாம் பல்மிசானோ (Sam Palmisano) ஆகியோரின் தூக்கத்தை கெடுக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தன்னிச்சையாய் அவரவர் வீட்டு பணிமனையிலும், அலுவலக ஓய்வுநேரத்திலும் இயங்கிவந்த இவர்களை 1985ல் ரிச்சார்ட் ஸ்டாள்மன் (Richard Stallman) துவங்கிய க்குனூ (GNU) இயக்கம் ஈர்த்தது (GNU - GNU is Not Unix என்பதன் சுருக்கம்). ரிச்சார்ட் தொன்மையும் பெருமையும் வாய்ந்த MIT சோதனைச்சாலையில் 1971ல் பணிபுரிந்த போதே அவர்மனதில் பரிமென்பொருள் தயாரிப்பதற்கான பொரி உருவாகிவிட்டதை நினைவுகூர்கிறார். அவரைப்பொருத்தமட்டில் மென்பொருள் நிரல் சமையற்குறிப்பைப் போன்றது. நாம் சமையற்குறிப்பை எவ்வாறு மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறோமோ, அதைப்போலவே நிரலையும் பகிரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். இந்த எண்ணமே அவரின் முயற்சியில் விழைந்த க்குனூ அமைப்பிற்கு ஆதார கொள்கை. இந்த கொள்கையால் ஈர்க்கப்பட்ட மற்ற கொந்தர்கள் க்குனூவுடன் இணைந்து செயல்படத்துவங்கினார்கள்.

முதலில் GNUவுக்கு ஒரு இயங்குதளத்தை (operating System) உருவாக்குவதே ரிச்சார்டின் முதற்பணியாக இருந்தது. அதற்கான முதல் முயற்சியாக தொகுப்பு செயலியை (Compiler) எழுதினார். ஆனாலும் க்குனூ வளர முக்கியக்காரணம் அவர்கள் தயாரித்த ஈமாக்ஸ் (EMacs) என்னும் பதிப்பு செயலியே ஆகும். இன்று நாம் உபயோகிக்கும் வோர்ட் (Word) , நோட்பாட் (Notepad) போன்ற செயலிகளை யுனிக்ஸ் இயங்குதளத்தில் அன்று இல்லை. யுனிக்ஸ் படமோ சித்திரங்களோ அற்ற வெறும் உரை கட்டளைகளை (text commands) கொண்டு செயல்படும் தளம். அதில் vi, ed போன்ற மிகவும் தொன்மையான வசதி குறைந்த செயலிகளையே இயக்கமுடியும். அதில் வெட்டி ஒட்டுவதற்கு வசதி கொண்ட ஈமாக்ஸ் அந்த பழைய செயலிகளைக்காட்டிலும் கவர்ச்சிகரமாய் காட்சியளித்தது. அந்த வெற்றிதான் க்குனூவிற்கு ஒரு முகவரி தந்தது. மென்பொருள் தயாரிப்பவர் க்குனூவின் பக்கம் தம் பார்வையை திருப்பத்துவங்கினர்.

சும்மா அல்ல, சுதந்திரம் - Free as in Freedom:
----------------------------------------------------------
க்குனூவின் இந்த வெற்றி 1985ல் பரி மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation - FSF) நிறுவ ஆதாரமாய் இருந்தது. இந்த அறக்கட்டளை ஆர்வலர்கள் பலரையும் தன்பால் ஈர்த்தது. பெரும் நிறுவனங்களின் பதுக்குக்குழியில் அகப்பட்டு, கூஜாவில் அடைப்பட்டிருந்த மென்பொருள் என்ற மாபெரும் சக்தி, முதன்முதலில் சாதாரண சுப்பனின் கையிலும் தவழ முடியும் என்ற நம்பிக்கை
ஒளிதீபம் சுடர்விட்டு பிராகாசித்தது. க்குனூ இயங்குதளத்தை யுனிக்ஸ் போன்ற ஒரு பலம் வாய்ந்த தளமாய் இலவசமாய் வெளியீடு செய்வதே அவர்களின் முதல் குறிக்கோள். ஈமாக்ஸ் பதிப்பு செயலியை வர்த்தக ரீதியாக விற்றதன் மூலமும், தொழிற்கூடங்கள் மற்றும் ஆர்வலர்களின் பணம், பொருள் நன்கொடைகளாலும் அறக்கட்டளை வளர்ந்தது. அன்று துவங்கிய அதன் பயணம் இன்று பல பெரும் நிறுவனங்களுக்கு ஈடாக, ஏன் அவர்களைக்காட்டிலும் தரமான தயாரிப்புகளை வெளியிட்டு அவர்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, Free என்று கூறிவிட்டு எப்படி வர்த்தக ரீதியாக விற்றார்கள் என்ற கேள்வி எழுகிறதுதானே. Free என்பது இலவசம் என்பதை குறிக்கவும் ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் சொல் என்பதால் சற்றே குழப்பமெற்படுவது சகஜமே. இங்கு free என்பது சுதந்திரம் என்ற பொருளில் வழங்கப்பட்டது. 'அடப்போய்யா... விடிய விடிய கத படிச்சிட்டு இதற்கும் காசு கொடுக்கணும்னா என்னத்த free?" என்றுதானே
நினைக்கிறீங்க. நிற்க! அதை விளக்கும் முன் FSFன் சித்தாந்தத்தை கொஞ்சம் பார்த்துவிடலாம்.

பரிமென்பொருள் என்பது உபயோகிப்பவனின் சுதந்திரத்தை வழியுறுத்துவது, அதை செயல்படுத்துவது FSFன் தலையாய கடமை. ஒரு மென்பொருள் உபயோகிப்பவனுக்கு இயக்குவதற்கும் (to run/execute), பிரதியெடுக்கவும் (to copy), வர்த்தக ரீதியாக பொட்டலம் கட்டி விற்கவும் (to distribute), மாற்றியமைக்கவும் (to change / modify), முன்னெடுத்துச் செல்லவும் (to improve) முழூ சுதந்திரத்தையும் உரிமையையும் தருகிறது. ஒரு பரி மென்பொருள் நான்கு வகை சுதந்திரங்களை ஒருவனுக்கு வழங்குகிறது.

அவை,

(அ) மென்பொருளை எந்த தளத்திலும் எந்த காரணத்திற்காகவும் இயக்கலாம்.
(எ.கா.) இதை விளக்க ஒரு சிறிய செய்தி. மைக்ரோசாப்டின் FAT ஆவண வகைப்படுத்தும் அமைப்பு முந்தைய தலைமுறை DOS இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. விண்டோஸ் புகழடையத்துவங்கியதும் மைக்ரோசாப்டே FATஐ மறந்துவிட்டது. ஆனால் இன்றைய நவீன காமிராக்களிலும், காம்கார்டர்களிலும் உபயோகிக்கும் நினைவகச் சிப்களில் இந்த அமைப்பை பயன்படுத்தத் துவங்கினார்கள். விடுவார்களா மைக்ரோ ஸாப்ட். FAT அமைப்பு அவர்களுக்கு சொந்தமானதால் அதை உபயோகிக்க கப்பம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டது. அதுவே FAT பரி மென்பொருள் காப்புரிமைப் பெற்றிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, 'எந்த தளத்திலும்' இயக்கியிருக்கலாம் .

(ஆ) மென்பொருள் எப்படி இயங்குகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து கற்றுக்கொள்ளலாம். தேவைக்கேற்ப மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு வசதி செய்ய மென்பொருளின் நிரலை (source code) உபயோகிப்பவர் பெற்றுக்கொள்ளலாம்.
(எ.கா) உங்க மனைவிக்கு அழகான புடவை ஒன்று வாங்கிவருகிறீர்கள். ஆனா பாருங்க உங்க இரண்டு பெண் குழந்தைக்கும் அந்த நிறம் தான் பிடிச்சிருக்கு. உங்க மனைவியும் சரி குழந்தைங்க மகிழ்ச்சிதானே முக்கியம், புடவையை ரெண்டா வெட்டி இருவருக்கும் பாவாடைச் சட்டை தைக்கலாம் என்று யோசனை குடுப்பாங்கதானே? அப்படி ரெண்டா வெட்டினா நல்லி குப்புசாமிச் செட்டியார் உங்க
வீட்டு கதவைத்தட்டி, 'நான் புடவைதான் வித்தேன், அதைப் பாவாடை சட்டையா மாற்ற உங்களுக்கு உரிமையில்லை, எங்ககிட்ட வந்து கொடுத்தா நாங்கதான் வெட்டி தைத்து தருவோம், அதுக்கும் தனியா பணம் கொடுத்துரணும்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் இன்றைக்கும் கணினி மென்பொருள் துறையில் நடைபெறுகிறது.

(இ) மென்பொருளை நகலெடுத்து மற்றவர்க்கு வழங்க உரிமை.
(எ.கா) ஒரு பெரிய மூட்டை அரிசி வாங்கி மற்ற வியாபாரிக்கோ, உபயோகிப்பாளனுக்கோ பொட்டலம் கட்டி விற்கலாம். சும்மா கிடைக்கிற தண்ணீரை போத்தலில் அடைத்து, கொஞ்சம் சுவை சேர்த்து கோலா விற்பதைப் போன்றது.

(ஈ) மென்பொருளை மேம்படுத்தவும், அதை மக்களுக்கு வழங்கி இயக்கம் வளர பாடுபடுவது. அவ்வாறு வெளியிடப்படும் தயாரிப்பின் நிரலும்
பொதுவில் இடவேண்டும்.

இந்த சுதந்திரங்களும் உரிமைகளும் லட்சலட்சமாய் செலவு செய்தாலும் சன், ஐபிஎம், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மென்பொருட்களில்
கிடைக்காது.

ஆதலினால் காப்புரிமை பெறுவீர் - GNU Licences
------------------------------------------------------------

பரிமென்பொருள் என்றாலும் அதற்கும் காப்புரிமை உண்டு. "யோவ், முதல்ல பணம் வசூல் பண்ணலாம்ணே, இப்போ காப்புரிமையும் இருக்குன்னு சொல்ற... என்னப்பு சின்ன புள்ள விளையாட்டா உனக்கு, எனக்கு நிறைய வேல இருக்குது, உக்கும்..." என்று நீங்க புலம்புவது என் காதில் விழாமலில்லை. சும்மா கொஞ்சமே கொஞ்சம் காப்புரிமைபற்றி. சரியா?

மூடிய நிரல் மென்பொருள்களை உபயோகித்தவர்கள் அதை இயக்கத் துவங்குவதற்கு முன் பல ஒப்பந்தங்களுக்கும், காப்புரிமைகளுக்கும் 'ஆம்' என்று சொடுக்கித்தான் உள்ளே நுழையமுடியும். ஆனால் அந்த காப்புரிமைகளுக்கும் பரி / திறந்த நிரல் மென்பொருள் காப்புரிமை ஒப்பந்தங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளது. அடிப்படை வேறுபாடு, திறந்த நிரல் காப்புரிமை, சட்டங்களைப் பயன்படுத்தியே பயன்படுத்துபவரின் உரிமைகளை பாதுகாக்கும் கெட்டிக்காரத் திட்டம். மூடிய நிரல் காப்புரிமை பெரும் நிறுவனங்களின் பணப்பேழையைக் காக்கும் கவசங்களே. அந்த ஒப்பந்தங்கள் மேற்குறிப்பிட்ட நான்கு சுதந்திரங்கள் உபயோகிப்பாளனுக்கு இல்லை, அது மீறப்பட்டால் சட்டத்தின் துணைகொண்டு தண்டிக்கப்படலாம் என எச்சரித்து நம்மை (தங்கள் தயாரிப்பிற்கும் நிறுவனத்திற்கும்) அடிமைப்படுத்தும் சாசனம்.

க்குனூவும் பல வகையான காப்புரிமைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அவைகள் எதுவும் அடிமைச் சாசனங்களல்ல, சுதந்திரப் பிரகடணம். பரிமென்பொருளின் வளர்ச்சிக்கு உரமூட்டவும் உபயோகிப்பவனின் சுதந்திரத்தை காக்கவும் க்குனூவின் காப்புரிமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆர்வலர் ஒருவர் பரி மென்பொருள் தயாரிப்பு ஒன்றை திருத்தி மேம்படுத்துகின்றார் எனக் கொள்வோம். அதை அவர் மூடிய நிரலாய் மாற்றி விற்பனை செய்ய முடியாது. அந்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பும் க்குனூவின் அதே திறந்த காப்புரிமையுடன் வெளியிடப்படவேண்டும். இதனால் பெரும் நிறுவனங்கள் பரி மென்பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தடுக்கப்படுகிறது.

பார்த்தீர்களா, இந்த ஒரு எளிய கட்டுப்பாட்டினால் பரிமென்பொருள் தயாரிப்பும் ஊக்குவிக்கப்படுகிறது, அதே சமயம் பெரும் முதலைகளின் கைகளில் சிக்காமலும் காப்பாற்றப்படுகிறது. க்குனூவின் அனைத்து வகை காப்புரிமைகளும் இதன் அடிப்படையில் அமைந்தவைதான்.


பறி, பரி :
-----------
கறவைமாடுகளாய் வாடிக்கையாளர்களை பாவித்து தன் உரிமத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்த நிறுவனங்களுக்கு இந்த உரிமம் ஒரு பெரும் சவால்.

சரி ஆனாலும் பரி மென்பொருளில் ஒரு சில நடைமுறைசிக்கல் உள்ளது. அது ஆணைமூலத்தில் சிறிய மாற்றத்தை செய்து வேறு பெயரில் யார் வேண்டுமானாலும் பொட்டலம் கட்டி தங்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய முடியும் . அவ்வாறு விற்கப்பட்ட தொகையிலிருந்து மூலத்தை தயாரித்தவனுக்கு ராயல்டி கொடுக்க வேண்டியதில்லை. அவ்வாறு ஒரு சிறுதொகையை தயாரித்தவனுக்கு தருவது விற்பனை நிறுவனங்களின் நெறியைச் சார்ந்தது, கொடுக்கவேண்டும் என்று சட்டம் இல்லை. இன்று பரிமென்பொருட்களை அவ்வாறு விற்பனை செய்து வரும் ஐபிஎம் (IBM) , ரெட் ஹாட் (Redhat), நோவெல் (Novell), சன் (Sun) போன்ற நிறுவனங்கள் பரிமென்பொருட்களையும் அதற்கான சேவைகளையும் விற்பனை செய்கின்றனர். அதற்கு கைமாறாக பரிமென்பொருள் தயாரிப்பிற்கு இயந்திர, பண உதவி அளிக்கின்றன. அதேபோல தன் நிறுவங்களின் மூலம் அவ்வாறு பரிபொருள் தயாரிக்க மென்பொருள் எழுத்தர்களை தன் செலவில் சம்பளம் கொடுத்து அமர்த்துகிறது. (பரிமென்பொருளின் தயாரிப்பு பாதை தங்கள் கைவிட்டு போகாமல் இருக்கவே இவ்வாறான மென்பொருளாளர்கள் நியமிக்கப்படுவதாக வேறு சிலர் குறை கூறுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!).

ஆனாலும் கணினி பயன்படுத்தும் ஒரு சராசரி நபரும் சிறுதொழிலில் கணினிக்காக பல கோடி வாரியிரைக்க முடியாத சிறு நிறுவங்களும் பல சலுகைகள் அடைந்திருப்பதே உண்மை. ஒரு மென்பொருள் உரிமத்திற்காக ஆயிரக்கணக்காய் செலவு செய்யுமுன்னர் அதே தயாரிப்பு இலவசமாய் கிடைக்கிறதா என்று தேடிய பின்னரே வாங்குகின்றனர். அல்ல சேவைதான் முக்கியம் என்று முடிவுசெய்பவர்கள், நான் முன்பு குறிப்பிட்ட பொட்டல நிறுவனங்களை அணுகி சேவையை மிகக்குறைந்த விலையில் பெற்று கொள்கின்றனர். அதனால் மைக்ரோசாப்ட், அடோபெ (Adobe), ரியல் சிஸ்டம் (Real Systems), மாக்ரோ மீடியா (Macromedia) போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் விலை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

லினக்ஸ்:
----------
பரிமென்பொருளைப் பற்றிய அறிமுக கட்டுரையில் லினக்ஸ் பற்றி எழுதாதது, திருப்பதிக்கு போய் லட்டு வாங்காமல் வருவதைப் போன்றது. லினஸ் டொர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்பவர் பின்லாண்டு நாட்டில் ஹெல்சின்கி பல்கலைக்கழக மாணவராய் இருந்தபோது மினிக்ஸ் (Minix) என்ற யுனிக்ஸ் போன்ற இயங்குதளத்தின் எளிமையால் ஈர்க்கப்பட்டார். மினிக்ஸைக் காட்டிலும் ஒரு வலுவான வடிவமைப்புடன் லினக்ஸ் (Linux) என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு வெளியிட்டார். ஒரு இயங்குதளம் சரியாய் வேளை செய்ய கெர்னல் (Kernel) என்னும் 'மூல இயங்கி' மனித மூளையைப்போல அதன் உள்ளிருந்து செயல் பட வேண்டும். லினஸ் அந்த கெர்னலைத்தான் லினக்ஸ் என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு வெளியிட்டார். அவர் எழுதிய அந்த கெர்னலின் ஆணைமூலத்தை ஒரு கட்டுரை நோட்டில் 40 பக்கங்களில் குறுக்கி எழுதி விட முடியும். அவர் எழுதிய இந்த லினக்ஸ் கெர்னலை ஒரு இயங்குதளமாய் மாற்ற ஏற்கனவே க்குனூ வெளியிட்டிருந்த மற்ற மென்பொருட்களையும் லினிக்ஸில் இயங்குமாறு மாற்றி அமைத்தார். லினஸ் தன் தயாரிப்பை அறிவித்தவுடன் அனைவரும் மாலை சூடி கொண்டாடி விடவில்லை. முதலில் ஒரு மாணவனின் பொழுதுபோக்கு முயற்சி என்ற அளவிலேயே நிராகரித்தார்கள். ஆனால் மற்ற புதுப்புது மென்பொருட்தயாரிப்புகள் லினக்ஸில் இயங்குமாறு மாற்றி வெளியிடப்பட்டது லினக்ஸின் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இன்று மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்திற்கு அடுத்து அவர்களுக்கே சவால் விடக்கூடிய ஒரே இயங்குதளம் லினக்ஸ் மட்டுமே. மேலும் ரெட் ஹாட், மாண்ட்ரேக் (Mandrake) போன்ற
நிறுவனங்கள் லினக்ஸை சற்றே அழகுகூட்டி சேவையுடன் விற்பனை செய்வதும் அதன் வளர்ச்சிக்கு சாட்சியங்கள்.


பகையா பாசமா?
--------------------
இதையெல்லாம் கண்ட ஐபிஎம், சன் போன்ற நிறுவனங்கள், பரிபொருள் தயாரிப்புகளோடு போட்டியிடுவதைக் காட்டிலும் அதை அரவணைத்து கொண்டாலே தங்களால் நிலைக்க முடியும் என்பதை அறிந்து பரி மென்பொருத்தயாரிப்பில் தங்கள் நிறுவனத்தையும் ஈடுபடுத்திக்கொண்டார்கள். இந்நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள தங்கள் தயாரிப்பை திறந்த ஆணைமூலமாய் அறிவித்து விடுவார்கள். அதன் மூலம் உலகெங்கும் உள்ள திறந்த ஆணைமூல ஆர்வலர்கள் அதை மேலும் சீர்படுத்துவர். அவ்வாறு சீர்படுத்தப்பட்ட
வெளியீடுகளோடு தங்களின் தயாரிப்பை இணைத்து ஒரே பொட்டலமாய் விற்று விடுவார்கள். ஐபிஎம் மின் எக்லிப்ஸ் (Eclipse), நெட்ஸ்கேப்பின் மொசில்லா (Mozilla) போன்றவை இந்த உத்தியை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள்.


பரி பொருள் திறந்த நிரல் வேற்றுமை:
---------------------------------------------

எரிக் ரேமண்ட் (Eric S. Raymond), ப்ரூஸ் பெரன்ஸ் (Bruce Perens) ஆகியோர் பரி மென்பொருள் என்பது விற்பனை நிறுவனங்களுக்கும், உபயோகிப்பவருக்கும் குழப்பமளிப்பதாய் அறிந்து திறந்த நிரல் அறக்கட்டளையை (Open Source Foundation) 1998ன் நிறுவினர்.
திறந்தநிரல் ஆணைமூலம் பத்து கட்டளைகளை முன்நிறுத்தி துவங்கப்பட்டது. பரி பொருள் அறக்கட்டளைக்கும் திறந்த நிரல் ஆணைமூல அறக்கட்டளைக்கும் மிகச் சிறிய வேறுபாடே உள்ளது. இரண்டு அமைப்புக்களும் ஒரே நோக்கத்திற்காகவே செயல்படுகின்றன, ஆனால் அவர்களின் புரிதலிலும் அணுகுமுறையிலும்தான் சிறிய வித்தியாசம். திறந்த நிரல் ஆணையத்தை பொருத்தமட்டில் மூல நிரல் திறந்து அனைவருக்கும் எளிதில் கிடைக்கப்பெறுவது ஒரு நடைமுறை நிகழ்வு. பரிநிரல் ஆணையம் அதை ஒரு சமூக நிகழ்வாய் காண்கிறது. திறந்த நிரல் ஒரு தயாரிப்பு முறை, பரி பொருள் ஒரு சமூக முன்னேற்ற கழகம். திறந்த ஆணைக்குழுவிற்கு மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தினரின் சொந்த உபயோகிப்பாளரை அடிமையாக்கும் தயாரிப்புகள் குறைந்தபட்ச தீர்வு. பரிமென்பொருள் ஆணையத்தை பொறுத்தமட்டில் அது ஒரு சமூக அவலம், அதற்கு பரி மென்பொருள் மட்டுமே தீர்வு.


பரி மென்பொருட்களின் சித்தாந்தத்தை அவர்களின் உரிமத்தை பற்றி விவரிக்கும் போது பார்த்தோம். இப்போது திறந்த ஆணைமூலத்தின் பத்து கட்டளைகளைப் பற்றி பார்க்கலாம்.

பத்து கட்டளைகள்- The Ten Commandments:
--------------------------------------------------------
திறந்த நிரல் என்பது வெறும் நிரலை உபயோகிப்பவர்களுக்கு கொடுத்துவிடுவது இல்லை. ஒரு திறந்த நிரல் தயாரிப்பு கீழ்கண்ட பத்து கட்டளைகளுக்கு இணங்கி வெளியிடப்படவேண்டும். அப்போதே அது திறந்த நிரல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்படும்.

(அ) இலவசமாய் எத்தனை முறையும் எந்த வகையிலும் வழங்கிட உரிமம். ஒரு தயாரிப்பை முழுமையாகவோ, பகுதியாகவோ, ஒன்றிற்கு மேற்பட்ட தளங்களிலிருந்து பெறப்பட்ட கூட்டாகவும் வெளியிடலாம்.
(ஆ) மூல நிரல் : ஒரு தயாரிப்பின் வெளியீட்டுடன் அதன் நிரல் கட்டாயம் இணைக்கப்படவேண்டும். மேலும் உபயோகிப்பவர் அதை தன் எண்ணப்படி மாற்றியமைக்க அதை திரும்ப கட்டுமானம் செய்ய தேவையான குறிப்புகளும் இணைக்கப்படவேண்டும்
(இ) வழங்கப்பட்ட தயாரிப்பு மாற்றத்திற்கும் முன்னேற்றதிற்கும் தடைவிதிக்காதிருக்க வேண்டும்.
(ஈ) மேற்கூறியபடி மாற்றப்பட்ட நிரலும் திறந்துவிடப்படவேண்டும். அவ்வாறு மாற்றத்திற்கு உட்பட்ட தயாரிப்பும் மூல நிரலின் அதே உரிமத்தில் வெளியிடப்படவேண்டும்.
(உ) தனிப்பட்ட நபருக்கோ குழுவுக்கோ எதிராக பாராபட்சம் காட்டப்படக்கூடாது.
(ஊ) தனிப்பட்ட துறைக்கு பாராபட்சமாய் இருக்கக்கூடாது. மேலும் ஒரு திறந்த நிரல் தயாரிப்பு ஒரு துறைக்கு மட்டுமே திறந்த நிரலாய் வெளியிடப்படக்கூடாது. எந்த துறையும் எந்த வகையிலும் திறந்த நிரல் தயாரிப்புகளை உபயோகித்து மறு வெளியீடு செய்யலாம்.
(எ) தயாரிப்பிற்கான உரிமம் மறு வெளியீடு செய்ய முனைபவர் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். ஒவ்வொரு மறு வெளியீட்டாளருக்கும் தனித்தனி உரிமம் வெளியிடப்படவேண்டிய அவசியமில்லை.
(ஏ) உரிமம் மற்ற ஒரு தயாரிப்பை சார்ந்து இருக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக விலை அதிகமான ஒரு தயாரிப்பை வாங்குபவர்களுக்கு மட்டுமே மற்றொரு தயாரிப்பு இலவசம் என்று அறிவித்தால் அது திறந்த நிரலாகாது.
(ஐ) உரிமம் மற்ற தயாரிப்பிற்கு தடையாய் இருக்கக்கூடாது. அதாவது ஒரு திறந்த நிரல் மென்பொருளுடன் வழங்கப்படும் (அல்லது விற்கப்படும்) மற்ற தயாரிப்புகள் திறந்த நிரலாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.
(ஒ) உரிமம் எந்த தொழில் நுட்பத்தையும் சார்ந்திருத்தல் கூடாது.

இந்த உரிமங்கள் க்குனூவின் நான்கு விதிமுறைகளைக்காட்டிலும் இளகியதாய் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த பத்து கட்டளைகள் 1998ல் வெளிவந்த பின்னரே ஐபிஎம், நெட்ஸ்கேப் போன்ற நிறுவனங்கள் திறந்த நிரலின் பக்கம் தலைசாய்க்க உதவியது.



குருடோ நொண்டியோ, குழம்பு ருசியா?
------------------------------------------------
பரி மற்றும் திறந்த நிரல் ஆணைமுலங்களுக்கிடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் தாங்கள் ஒத்த கருத்துள்ள விடயங்களில் இணைந்தே செயல்படுகிறார்கள். இந்த இரண்டு அறக்கட்டளைகளின் செயல்பாட்டினால் வாடிக்கையாளனுக்கு பல இயங்கிகளும் செயலிகளும் வழங்கிகளும் எளிதில் இலவசமாகவோ, அல்லது குறைந்த விலையிலோ கிடைக்கிறது. லட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து சலித்திருந்த மென்பொருள் உபயோகிக்கும் நிறுவனங்களும் இன்று தாமே முன்வந்து இந்த இணையங்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டி அன்பளிப்பாக வாரி இரைக்கின்றனர். வலியவரிடம் பெற்று வறியவனுக்கு வழங்கும் நவின தேவதைகளாய் இவ்வாணையங்களும் செவ்வனே பணி செய்கின்றனர்.

தமிழுக்கு என்ன பயன்?
---------------------------
திறந்த ஆணைமூலம் பரி பொருள் வளர்ச்சி பற்றி அறிமுகமாகிவிட்டது, ஆனால் அதனால் தமிழற்கும் தமிழுக்கும் என்ன பயன்?

இதோ அதற்கு பதில்: லினக்ஸ் போன்ற ஒரு இயங்குதளத்தை ஒரு நிறுவனம் இன்று துவங்கி தயாரிக்க நேர்ந்தால் எத்தனை செலவு ஆகும் என்று தெரியுமா? அதிகமில்லை நண்பர்களே சில பில்லியன் டாலர்களே. அதனால் அவ்வளவு செலவு செய்து தயாரிக்க எந்த முட்டாளும் இன்று முன்வரமாட்டான். இன்று சந்தையில் இலவசமாய் கிடைக்கும் பல செயலிகளை தயாரிக்கவும் இதைப்போல பில்லியன் பில்லியனாய் கொட்டவேண்டும். அதனால் நம்மால் தமிழுக்கு தனியாய் ஒரு இயங்குதளத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம்.

மேலும் ஒரு புதிய தயாரிப்பு வெளியிடும் போது அதன் தமிழ் மொழியாக்கத்திற்கு அந்த நிறுவனம் மனது வைக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதை அவர்கள் மனது வைத்து மொழிபெயர்ப்பதற்குள் அடுத்த வெளியீடு வந்திருக்கும். நாமே அதை தமிழில் மொழிமாற்றம் செய்ய நம்மிடம் மூல நிரலும் கிடைக்காது, உரிமமும் வழங்கமாட்டார்கள். இங்கேதான் திறந்த நிரலின் தயவு நமக்கு வேண்டும்.


கணினியைப் பொறுத்தமட்டில் அதற்கு எந்த மொழியும் தெரியாது. அதற்குள் எல்லாம் பூஜ்யங்களும் ஒன்றுகளும்தான். எந்த மொழியாக இருந்தாலும் கணினி அதை பூஜ்யமும் ஒன்றுமாய் மாற்றியே சேமிக்கிறது. நாம் ஒரு கணினியை இயக்கும் போது அதில் காணும் எழுத்துக்கள் யாவும் ஒரு கோப்பில் இருந்து பெறப்படுகிறது. அந்த கோப்பில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தமிழ் எழுத்துருக்களில் மாற்றி அமைத்துவிட்டால், தமிழ் கணினி தயார் (நான் எளிதாக விளக்கிவிட்டேனே ஒழிய அதை செய்வதற்கும் சிரமமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு தயாரிப்பை முதலில் இருந்து துவங்குவதை ஒப்பு நோக்கும் போது இது மிகவும் எளிய செயலே!). அவ்வாறு அக்கோப்பு வாக்கியங்களை மாற்றி அமைத்துவுடன் ஆணைமூல நிரலை மீண்டும் தொகுக்க வேண்டும் (re-compile). இதுவெல்லாம் மூல நிரல் இருந்தாலே சாத்தியம். அதனால் தான் திறந்த நிரல் மென்பொருட்கள், தமிழில் கணினி என்னும் நம் கனவை நோக்கி நாம் நகரும் பாதையாய் இருக்கிறது. நம் அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவு செய்யத்தேவையில்லை, ஏற்கனவே திறந்த நிரல் ஆணைமூலதிட்டத்தில் கிடைக்கும் இலவச மென்பொருட்களை தேர்ந்தெடுத்து அதை அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்து குறைந்த விலையில் தமிழ் கணினி வழங்க ஏற்பாடு செய்யலாம்.


இப்போதும் தமிழா (www.thamizha.com), தமிழ் ஓப்பன் ஆபீஸ் (ta.openoffice.org), தமிழ் லினக்ஸ் (www.tamillinux.org), ழ-கணினி (www.zhakanini.org) போன்ற முனைவர்கள் அரசாங்கத்தின் எந்த உதவியுமின்றி (ழ-கணினி - தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் மானியம் பெற்றது) தங்களின் சொந்த செலவில் தமிழருக்கு இலவச தமிழ் கணினி மென்பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இந்த பரி / திறந்த ஆணையத்திற்கு நாம் பல வகையில் உதவி செய்ய முடியும். காபிக் கோப்பை, மேற்சட்டை போன்ற தயாரிப்புக்ளை வாங்கி அவர்களை ஊக்குவிக்கலாம். அதே போல நேரமிருக்கும் கணினி மென்பொருள் தயாரிப்பில் அனுபவம் மிக்க தமிழர்கள் இன்னும் மொழிபெயர்க்கப்படாத உபயோகமுள்ள தமிழ் செயலிகளை மொழிபெயர்க்க உதவலாம். மேலும் வியாபார ஆர்வமுள்ள இளைஞர்கள் தமிழ் மென்பொருள் அடங்கிய கணினியை தமிழ் பேசும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்து விற்பனை செய்து லாபமும் அடையலாம். அனைத்திற்கும் மேலாக பரி / திறந்த மென்பொருள் தயாரிப்புகளை முடிந்தவரை உபயோகித்து பழகவேண்டும். ஏனைய பணம்பிடுங்கி தயாரிப்புகளைவிட இந்த மென்பொருட்கள் அதிகமான வசதிகளை கொண்டிருப்பதாக பலரும் சாட்சியம் அளிக்கிறார்கள். உங்கள் நிறுவனமோ, நண்பரோ கணினி வாங்க உத்தேசித்திருந்தால் அவர்களுக்கு இந்த கட்டுரையை படிக்க கொடுங்கள், பரி மென்பொருள் தயாரிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.

நன்றி:
------
http://www.fsf.org
http://www.opensource.org
http://www.catb.org/~esr/faqs/linus/
http://www.linux.org/info/index.html

இணைப்புரை:
----------------
நிதமும் நாம் உபயோகிக்கும் மென்பொருட்களும் அதற்கு இணையான திறந்த நிரல் மென்பொருட்கள்

மைக்ரோ சாப்ட் ஆபிஸ் => ஒப்பன் ஆபிஸ் (www.openoffice.org)
IIS வழங்கி (Internet Server) => அப்பாச்சி (www.apache.org)
இன்டர் நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி (Internet Explorer) => •பயர் •பாக்ஸ் (www.mozilla.org/products/firefox/) உலாவி
விண்டோஸ் இயங்குதளம் => லினக்ஸ் இயங்குதளம் (www.linux.org)
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (Outlook Express) => மொஸில்லா இமெயில் (www.mozilla.org)
ஆரக்கிள் (Oracle), SQL தகவல்தளம் => மை சீக்யுவல் (www.mysql.com)
யாஹ¥ தூதுவன் (Yahoo Messenger) => கெய்ம் (gaim.sourceforge.net)
வின் ஜிப் (WinZip) => 7- ஜிப் (www.7-zip.org)

மேலும் மற்ற செயலிகளை கிழ்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்.

http://www.chlug.org/oss_equiv.php
http://www.asiaosc.org/enwiki/page/Open_source_replacements_for_proprietary_software.html


------

இற்றைப்படுத்தப்பட்டது:

மேலே குறிப்பிடப்பட்டிருந்த உரல்கள் செயல்படவில்லை எனபதை அன்பர் ஒருவர் அறிவுறுத்தியிருந்தார், சில வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையாகையால் உரல்கள் செயல்பட முடியாத சாத்தியங்கள் எனக்கு மறுபதிக்கும் போது தோன்றவில்லை. சுட்டிக்காட்டியவர்க்கு நன்றி!

நிதமும் நாம் உபயோகிக்கும் மென்பொருட்களும் அதற்கு இணையான திறந்த நிரல் மென்பொருட்களின் பட்டியல்:

http://whdb.com/2008/the-top-50-proprietary-programs-that-drive-you-crazy-and-their-open-source-alternatives/

http://en.wikipedia.org/wiki/List_of_open_source_software_packages

மேலும் Sourceforge.net தளத்திற்கு சென்று தேடு பொறி உதவி கொண்டு தேடினால் பல அறிய சீரிய மென்பொருட்கள் கிடைக்கும்!

12 comments:

said...

மிக அரிய தகவல்களுடன் பதிவிட்டிருக்கிறீர்கள். பகிர்தலுக்கு நன்றி.

said...

@ஸ்ரீதர் நாராயணன்

ஆர்வமாய் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஸ்ரீதர்!

said...

மென்பொருள்களின் அதீத விலையினால் அல்லறுவோர்க்கு நல்ல செய்திகள்

said...

@கோவை விஜய்

மிகவும் சரி விஜய்! பல முன்னேறும் நாடுகளில், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் அந்நாட்டு அரசாங்கங்கள் திறவூற்று மென்பொருட்களை ஆதரிக்கின்றன. அதன் மூலம் திருட்டு மென்பொருள் நுகர்வு பெரிதாக குறைந்துள்ளது. அந்நாடுகளுக்கு மைக்ரோசாப்ட்டும், சன்னும் வாரிவழங்கினாலும் சட்டை செய்வதில்லை.

Anonymous said...

பெருசா இருந்தாலும் நிறைய தகவல்கள் ரசிக்கும்படி இருக்கு. பல விசயங்கள் கற்றுகொண்டேன்!

Anonymous said...

கடைசில இருக்கற லிங்க் எதுவுமே வேலை செய்யவில்லை!

said...

@அனானி1

உஙகளுக்கு உதவியதில் மகிழ்ச்சி

@அனானி2

சரி செய்துவிடுகிறேன்!

said...

@அனானி2

இற்றைப்படுத்திவிட்டேன். சுட்டிக்காட்டிமைக்கு நன்றி!

said...

கலக்குனே, கலக்கறே, கலக்குவே, சந்ரூ

said...

@காசி

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்! தன்யனானேன் ப்ரபோ!!

சோமு said...

மிகவும் பயனுள்ள கருத்துகளை தங்கள் கட்டுரையின் மூலம் அறியச் செய்தமைக்கு நன்றி.

said...

@சோமு

உங்களுக்கு இக்கட்டுரை பயனளித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி!