இணையும் நிறுவனங்கள்

வாஜ்பாய் அரசு பதவி ஏற்பதற்கு முன் என நினைக்கிறேன், இந்தியாவில் ஒரு மின்மடல் வலம்வந்து கொண்டிருந்தது. பல முறை எங்கள் வீட்டிற்கு துண்டு பிரசுரங்களாகவும் வழங்கிவந்தார்கள். அந்த பிரசுரங்களின் சாரம் நாம் சுதேசி பொருட்களையே நுகர வேண்டுமென்றும், அன்னிய பொருட்களை பாவிக்க கூடாது என்பதுமாக இருக்கும். மேலும் நாம் நிதமும் உபயோகிக்கும் ஒரு அன்னிய நாட்டு வணிகப்பொருளை குறிப்பிட்டு அதற்கு நிகரான இந்திய பொருட்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். (அன்னிய நாட்டு லக்ஸ் சோப்பிற்கு பதில் இந்திய லைப்பாய் போன்ற நகைச்சுவைகளும் இதில் அடக்கம்).
தாராளமய உலகமய சூழல் முழுதும் உணரப்படாத காலகட்டமது. சிலர் அதை உண்மையென நம்பி அந்த அட்டவணையில் உள்ள ‘தேசிய’ பொருட்களை வாங்கியவர்களும் இருந்தனர். இன்றைய காலகட்டத்திலும் தாராளமயமாக்கல் சாதாரண மக்களுக்கு பரவலாக எட்டாத புரிபடாத விஷயமாகயிருந்தாலும், அதை ஏற்று வாழக்கற்றுக்கொண்டார்கள்.
உலகமயமாக்கல் போதிக்கப்பட்ட போது இடதுசாரிகளால் உந்தப்பட்டு பெருவாரியான மக்கள் அதை எதிர்க்கவே செய்தனர். இடதுசாரிகள் பெருவாரியான இந்திய நிறுவனங்கள் உலக சந்தையின் தாக்கத்தை சந்திக்க முடியாமல் மடிந்து நொடிந்துவிடும் என்றே ஆருடங்கள் கூறினர்.
சந்தை பொருளாதாரத்தின் அடிநாதமே வல்லவன் வாழ்வான் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். இந்திய நிறுவனங்களை ஏதோ நோஞ்சான் நிறுவனங்களாக இடதுசாரிகள் கணித்து வந்தனர்.
ஆனால் இன்று நடப்பவைகளைப் பார்த்தால் அவர்கள் கணிப்பு பொய்த்துவருவதைக் காணலாம்.
டாடா-கோரஸ், ஹிந்டல்கோ-நோவெலிஸ் போன்ற நிறுவனங்கள் இணைவது உலகமயமாக்கலின் நீட்சி என்றே எண்ணவேண்டியுள்ளது. மேலும் இந்த நிறுவன இணைப்புகள் பலரும் எதிர்பார்த்த கணினி சம்பந்த தொழிலல்லாமல் மற்ற அடிப்படை கட்டுமான துறைகளில் நடந்திருப்பது சிறப்பு.
இந்திய முதலீட்டாளகள் இந்த இணைப்புகளை சந்தேகத்தோடும் கவலையுடனும் நோக்கினாலும், இது ஒரு தேவைப்பட்ட காலத்தின் கட்டாயமாகவே எண்ண வேண்டும். இன்று டாடாவோ மித்தலோ முந்தியடிக்காவிட்டால் மூழ்கடிக்கப்படுவர். இந்திய பங்கு முதலீட்டாளர்கள் சற்றே பிற்போக்கு குணமுள்ளவர்களாக இருந்தாலும், தொலைநோக்கு பார்வையில் இந்த இணைப்புகளால் ஆதாயமடையப்போவதை கணித்திருப்பார்கள். இன்று டாடா, ஹிந்டல்கோ பங்குகளின் விலை சரிவைச்சந்தித்திருப்பது முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பாக கருதவேண்டும். இதைப்போன்ற பங்குகளை ஒருவர் தன்னுடைய ஒய்யூதிய நிதிகளில் சேர்க்க இதுவே தக்க தருணம்.
——>>>——
இதைப்போன்ற இணைப்புகள் இந்தியாவிற்கு புதிதான விஷயம்… ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்காவின் Antitrust சட்டத்திற்கு பயந்து பிரிவதும் இணைவதும் அன்றாட நிகழ்ச்சி. (இந்த Antitrust சட்டத்தை முன்வைத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இரண்டாக உடைக்க நெட்ஸ்கேப் முதலானோர் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து பில் கேட்ஸ் மீள எடுத்த முயற்சிகள் மிக பிரசித்தம்). இதைப்போன்றதொரு பெரிய இணைப்பு சமிபத்தில் Cingular-AT&T பற்றிய காமெடி சென்ட்ரலின் Stephen Colbertன் விளக்க விடியோ கிழே உங்கள் பார்வைக்கு!


5 comments:

said...

சோதனைப் பின்னூட்டம்!

said...

/பெரிய இணைப்பு சமிபத்தில் Cingular-AT&T பற்றிய... /

உண்மை-தாங்க! செய்திக்கும், வீடியோவுக்கும் நன்றி!

நல்லா எழுதுறிங்க..வாழ்த்துக்கள்!!

[ஒரே நேரத்துல எப்படிங்க ...நியு ஜெர்சி & ஜார்ஜியா-னு ரெண்டு இடத்துல ??]

said...

நன்றி தென்றல்!

>>>>[ஒரே நேரத்துல எப்படிங்க ...நியு ஜெர்சி & ஜார்ஜியா-னு ரெண்டு இடத்துல ??]


வாரத்தில் நான்கு இரவுகள் ஜார்ஜியாவிலும் மூன்று இரவுகள் ஜெர்சியிலும் கழிப்பதினால். ;)

said...

//வாரத்தில் நான்கு இரவுகள் ஜார்ஜியாவிலும் மூன்று இரவுகள் ஜெர்சியிலும் கழிப்பதினால். ;)//
Georgia la enga? I am in Atlanta.

said...

சந்தோஷ்... நான் அட்லாண்டா மிட்-ட்வுன் பகுதியில் வசிக்கிறேன். வாருங்களேன், வாரக்கடைசியில் சந்திக்கலாம்.