ஈரா(க்)ன் போர் - அமெரிக்காவின் அவசியம்

முன்பே எனது வொர்ட் ப்ரஸ் தளத்தில் பதியப்பட்டு பூங்காவிலும் பதிப்பிக்க பதிவின் மறுபதிவு.

ஈராக் போரை நிறுத்தி/முடித்துவிட்டு படைகளை விலக்கிக் கொள்வதில் அமெரிக்காவிற்கு பல சிக்கல்கள் உள்ளன.



நவம்பர் 2006 மத்தியில் ஈராக்கில் 152,000 அமெரிக்க படை வீரர்கள் அமர்தப்பட்டிருந்தனர். கடந்த மாதம் படை பலத்தை இன்னும் உயர்த்தவேண்டும் என அதிபர் புஷ் குறிப்பிட்டிருந்தார். பிரதிநிதிகள் சபையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டாலும், புஷ் தன் அதிகாரத்தைக் கொண்டு மேலும் 21,500 படை வீரர்களை அனுப்புவார் என்றே தெரிகிறது. இதன் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 173,500+ ஆக உயரக்கூடிய வாய்ப்புள்ளது.

ஈராக் போருக்கான அமெரிக்க மக்களின் ஆதரவு தேய்ந்துவரும் இத்தருணத்தில் படைகளை குறைக்கச் சொல்லி ஜனநாயக கட்சியினர் புஷ்சிற்கு குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க படைகளை குறைப்பதினால் அமெரிக்காவிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். திரும்ப வரும் படை வீரர்களுக்கு வழங்க தேவையான பணியிடங்கள் காலியாக இல்லை. இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் வாய்புகள் உண்டு. சற்றே முன்னேறி வரும் அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் சரியத்துவங்கிவிடும். 2000த்தின் டாட்.காம் சரிவிலிருந்து மெதுவாக உயிர்பெற்றிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் மற்றொரு சரிவை சந்திக்க தயாராக இல்லை. மேலும் ஏற்கனவே துவண்டுகொண்டிருக்கும் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுடன் இந்த வேலையில்லா திண்டாட்டமும் கைக்கோர்த்துக் கொண்டால் அது அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.

அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவுகள் போர்களுக்கு பின்பு ஏற்பட்டவை என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

ஈராக் போர் முடிவின்றி நீண்டுகொண்டே போவதாலும் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போவதால் புஷ் பெரும் நெருக்கடியில் இப்போது உள்ளார். மக்களின் ஆதரவின்மையினாலோ, ஜனநாயகக்கட்சி ஒத்துழைக்க மறுப்பதாலோ புஷ் படைகளை விலக்கிக்கொண்டால் அது மாபெரும் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவிக்கும். அதனால் புஷ் படைவீரர்களை அமெரிக்காவிற்கு திருப்பப்பெருவார் என்று எண்ணுவதற்கில்லை. அப்படியே அவர் படைவீரர்களை திருப்பப்பெற்றாலும் அவரின் பதவி முடிவதற்கு மிக அருகிலேயே அந்த முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் புஷ்ஷின் பதவிகாலத்தில் எந்த பொருளாதார பின்னடைவுகளும் இன்றி அவர் ஆட்சியைவிட்டு விலகிடும் வாய்ப்புகள் உள்ளது.

இதை அறிந்தே அடுத்த ஆட்சியை பிடிக்க கனவுகாணும் ஜனநாயகக் கட்சியும் புஷ்ஷை படைகளை இப்போதே குறைக்கச்சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இந்த கண்ணாமூச்சிகளுக்கெல்லாம் அசரக்கூடிய ஆளாக புஷ் இல்லை என்பது அவரது சமிபத்திய பேச்சுகளில் தெளிவாக உள்ளது. பிரதிநிதிகள் சபை அவருடைய படை அதிகரிப்பிற்கான மனுவை நிராகரித்ததை புஷ் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இரு சபைகளும் நிராகரித்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது எண்ணத்தை செயல்படுத்துவார் என்பது கண்கூடாக தெரிகிறது. அப்படியே நெருக்கடி அதிகமானால் தனது பதவிகாலம் முடிவுறும் தருவாயில் படைகளை விலக்கிக்கொண்டு தனகு பிறகு வரும் ஆட்சியாளருக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை கொடுக்க புஷ் தயங்க மாட்டார்.



சரி அப்படியே மக்கள் ஜனநாயகக் கட்சியின் துணையுடன் ஒரு எழுச்சி போராட்டம் நடத்தினால் (அப்படி நடத்த முதுகெலும்லில்லாத ஜனநாயக கட்சியில் ஒரு தலைமையில்லை என்பதே உண்மை)? இருக்கவே இருக்கிறது ஈரான். படைகளை விலக்கிக்கொள்வதைத்தவிர புஷ்ஷின் கையில் உள்ள ஒரே மாற்று உபாயம் ஈரான். ஈரானின் செயலும் அதற்கு துணைபுரிவதாகவே உள்ளது. ஈரானின் சமிபத்திய அணு சோதனைகளை காரணம்காட்டி ஈரானின் மீது போர்த்தொடுக்க அமெரிக்க படைகளின் கைகளில் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு. பிபிசி செய்தியும் அதையே உறுதிசெய்கிறது. ஈரானின் அணு சோதனைகள் அயுதத்தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றதென்றோ ஈராக் “தீவிரவாதிகளுக்கு” ஈரான் அயுத உதவி வழங்குகிறதென்றோ அமெரிக்கா நிறுவித்தால் ஈரான் போர் தவிர்க்கமுடியாதாகிவிடும். இதில் இரண்டாவது காரணம் தமிழ்நாட்டு கஞ்சா வழக்குபோல எளிதில் அமெரிக்காவினால் ஜோடிக்க முடியும்.

அதனால் ஈரானின் போர் புஷ்ஷிற்கு உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை பொருத்தே அமையும்.

யு.எஸ்.தமிழன்